தமிழ் இனத்தின் தொழில் நுட்பம் சார்ந்த திறமைகளுக்கு முக்கிய சான்றாக ஆயிரம் ஆண்டுகளாக பிரமாணட்மாக காட்சி தந்து வரும் இராஜராஜீச்சரம் என்ற தஞ்சை பெரிய கோயிலை எடுப்பித்து உலகினையே வியக்கச் செய்தவர் மாமன்னர் இராஜராஜ சோழன் என்று அழைக்கப்படும் அருள்மொழிவர்மன் ஆவார்.பத்தாம் நூற்றாண்டில் கி.பி.985 ல் முடிசூட்டிக் கொண்ட மாமன்னர் இராஜராஜன் திட்டமிடுதல். திட்டமிட்டபடி செயல்படுதல். நீண்ட கால நோக்கு புறவயத்தன்மை. புதிய தொழில் நுட்பங்களை செயல்படுத்துதல் போன்ற அறிவியல் மதி நுட்பங்களையும் தொழில் நுட்பங்களையும் எந்த அளவிற்கு பெற்றிருந்தார் என்பதை இக்கட்டுரையின் வாயிலாக சிறிதளவு காணலாம்.
பத்து நூற்றாண்டுகளாக இயற்கை பேரழிவுகளையும், எதிரி நாட்டுப் படையெடுப்புகளையும் தாண்டி, இன்றும் மவுனமான முனிவரைப் போன்று தஞ்சைப் பெரிய கோயில் இருந்து வருவதற்கும், அத்தனை பிரமாணட்மான கோயில் கி.பி.1004 முதல் கி.பி.1010 வரையிலான ஆறே ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டதற்கும் அடிப்படையிலான காரணங்களாக இருப்பவை, மாமன்னர் இராஜராஜனின் அறிவியல் மதி நுட்பமும், கோயில் கட்டும் பணியில் ஈடுபட்ட அனைவரையும் அரவணைத்து சென்ற அவரின் தலைமைப் பண்புமே ஆகும்.
பொதுவாக அறிவியல் அறிஞர்களின் பண்புகளாக தற்காலத்தில் கருதப்படுபவை, கருதுகோள் அமைத்தல், அக்கருதுகோளுக்கு பல வழிமுறைகளை உருவாக்குதல், அவற்றை சோதிக்கத் திட்டமிடுதல், திட்டமிட்டவாறே அயராது பாடுபட்டு உண்மையைக் கண்டறிதல், கண்டறிந்த உண்மைகளை இந்த உலகிற்கு அர்ப்பணித்தல் ஆகியவையாகும். இத்துனை பண்புகளையும் சிறிதளவுகூட குறைவில்லாமல் மாமன்னர் இராஜராஜன் பெற்றிருந்த காரணத்தினால் உலகே வியக்கும் இப்பெரிய கோயிலை ஆறே ஆண்டுகளில் கட்டி முடிக்க முடிந்திருக்கிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள கைலாயநாதர் கோயிலைக் கண்டவுடன் இதனைவிட வானளாவிய கோயிலைத் தான் வணங்கும் ஈசனுக்குக் கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டார் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
ஒரு கட்டிடம் எழுப்புவதற்கு முன் அந்த இடத்தின் மண் அதற்கு ஏற்றதாக உள்ளதா? என்று மண் பரிசோதனை செய்வது தற்காலத்தில் மட்டுமே நடைபெறுவதாக நினைத்துக் கொண்டிருந்த நமக்கு, ஏறத்தாழ 50,000 டன் எடை கொண்ட கோயில் விமானத்தின் எடையைத் தாங்கவல்ல இடத்தை மாமன்னர் இராஜராஜனும் தலைமைத் தச்சரும் தேர்ந்தெடுத்த பிறகே பெரியகோயிலை எழுப்பினார்கள் என்பதை அறியும்பொழுது நமக்கு வியப்பு மேலிடுகிறது. அதாவது விவசாய களிமண் நிலத்தைப் பெற்றிருக்கும் தஞ்சை நகரின் மேற்குப் பகுதியில் 162 டன் எடையை ஒரு சதுர மீட்டரில் தாங்கும் அளவிற்கு உள்ள இடத்தை தேர்ந்தெடுத்து அதிலும். 47.4 டன் எடையை ஒரு சதுர மீட்டரில் தாங்கும் வண்ணம் பெரிய கோயில் கட்டுவிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து அவருடைய அறிவியல் மதிநுட்பத்தை நாம் போற்றியாக வேண்டும்
காஞ்சிபுரத்தில் உள்ள கைலாயநாதர் கோயிலைக் கண்டவுடன் இதனைவிட வானளாவிய கோயிலைத் தான் வணங்கும் ஈசனுக்குக் கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டார் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
ஒரு கட்டிடம் எழுப்புவதற்கு முன் அந்த இடத்தின் மண் அதற்கு ஏற்றதாக உள்ளதா? என்று மண் பரிசோதனை செய்வது தற்காலத்தில் மட்டுமே நடைபெறுவதாக நினைத்துக் கொண்டிருந்த நமக்கு, ஏறத்தாழ 50,000 டன் எடை கொண்ட கோயில் விமானத்தின் எடையைத் தாங்கவல்ல இடத்தை மாமன்னர் இராஜராஜனும் தலைமைத் தச்சரும் தேர்ந்தெடுத்த பிறகே பெரியகோயிலை எழுப்பினார்கள் என்பதை அறியும்பொழுது நமக்கு வியப்பு மேலிடுகிறது. அதாவது விவசாய களிமண் நிலத்தைப் பெற்றிருக்கும் தஞ்சை நகரின் மேற்குப் பகுதியில் 162 டன் எடையை ஒரு சதுர மீட்டரில் தாங்கும் அளவிற்கு உள்ள இடத்தை தேர்ந்தெடுத்து அதிலும். 47.4 டன் எடையை ஒரு சதுர மீட்டரில் தாங்கும் வண்ணம் பெரிய கோயில் கட்டுவிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து அவருடைய அறிவியல் மதிநுட்பத்தை நாம் போற்றியாக வேண்டும்
தஞ்சைக்குத் தெற்கு, தென்மேற்கு திசைகள் தவிர மற்ற திசைகள் அனைத்தும் ஆறுகளாலும், வாய்க்கால்களாலும் சூழப்பட்டு இருக்கின்றன. எனவே மற்ற பாதைகள் வழியாக கற்களை எடுத்து வருவது என்பது கடினமான பணியாக இருக்கும் என்பதாலும், தஞ்சையைவிட சற்று உயரமான தென்மேற்கு திசையே போக்குவரத்துக்கு ஏற்ற பகுதியாக இருக்கும் என்பதாலும், தஞ்சைக்கு அருகே கற்பாறைகள் கிடைக்கம் இடமும் அத்திசையே என்பதாலும், புதுக்கோட்டை மாவட்டம் குன்னாண்டார் கோயில் பகுதியில் இருந்த மலைகளில் இருந்து எடுத்து வரப்பெற்ற கற்கள்தான் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்ட பயன்படுத்தப்பெற்று இருக்கின்றன.
இந்த குன்னாண்டார் கோயில் தஞ்சையிலிருந்து ஏறத்தாழ 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் டன் எடை கொண்ட கற்களை இவ்வளவு தொலைவில் இருந்து சேதாரம் இல்லாமல் கொண்டு வந்ததே மாபெரும் இமாலய சாதனையாகக் கருதப்படுகிறது.
வீரசோழன் குஞ்சரமல்லான பெருந்தச்சன் என்பவர் தலைமை கட்டிடக் கலைஞராகவும், கோயிலின் இரண்டாம் நிலையைக் கட்டி முடிப்பதில் மதுராந்தகனான நித்த வினோத பெருந்தச்சன், இலத்தி சடையான கண்டராதித்த பெருந்தச்சன் ஆகியோரும் பெரும்பங்கு வகித்து இருக்கின்றார்கள் என்பதை தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.
மாமன்னர் இராஜராஜன் தான் கட்ட இருப்பது முழுவதும் கற்களால் ஆன கோயில் என்பதை அறிந்து, அக்கோயிலுக்கு எவ்வளவு கற்கள் தேவைப்படும் என்பதையும், அவற்றை பத்திரமாகக் கொண்டு வந்து சேர்க்க வேண்டிய வழி முறைகளையும், அதற்குத் தேவையான ஆட்கள், வாகனங்கள், யானைப் படை, கோயிலின் அதிகப்படியான எடையை தாங்கி நிற்கும் சுவர்கள் எந்த அளவு வலிமையாக இருக்க வேண்டும் என்பது போன்ற அனைத்து விபரங்களையும் விரல் நுனியில் வைத்துக்கொண்டுதான் கோயில் கட்டும் பணியினைத் தொடங்கி இருக்கின்றார். இதிலிருந்தே அவர் ஒரு அற்புதமான செயல் திட்டம் ஒன்றினை வகுத்து அதன்படி செயல்பட்டுள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.
மேலும் கோயிலின் கட்டிடப் பணி முடிந்தவுடன் அதன் எழில் மிகு கோபுரம் எங்கிருந்து பார்த்தாலும் அதன் அழகு சிறிதளவும் மறைக்கப்படக் கூடாது என்பதற்காக கோயில் வளாகதத்திற்கு 240 அடி நீளம் 120 அடி அகலம் கொண்ட பிரமாண்ட நீள் சதுர நிலைப் பகுதியைத் தேர்ந்தெடுத்து, அதன் பின்பாதியின் நடுப்பகுதியில் எடுப்பான கோபுரத்தை எழுப்பி உள்ளார் என்பதை அறியும்பொழுது, மாமன்னர் இராஜராஜனின் பொறியியல் திறனை தெரிந்து கொள்ள முடிகிறது.
மேலும் கோயில் வளாகத்தில் வேறு கட்டிடங்களைக் கட்டினால், அக்கட்டிடங்கள் கோயிலின் அழகைக் குலைத்து விடும் என்பதால், சண்டீஸ்வரம் ஆலயத்தினையும், முக்கிய வாசல்களையும் மட்டுமே இராஜராஜன் கட்டியுள்ளார்.இப்பொழுது கோயில் வளாகத்தில் இருக்கும் நந்தி மண்டபம் உட்பட மற்ற கோயில்களை அனைத்தும் நாயக்க மன்னர்கள் போன்றோரின் பிற்காலச் சேர்க்கையே ஆகும்.
கோயில் கோபுரத்தைத் தாங்கி நிற்கும் இரட்டைத் தளம் 80 அடி உயரம் கொண்டது. அதன் முதல் தளம் 60 அடி உயரமும், இரண்டாவது தளம் 20 அடி உயரமும் கொண்டது. அதற்கு முன்னால் இருக்கும் முகமண்டபமும் இராஜராஜன் காலத்தில் இரட்டை தளங்களாக இருந்துள்ளது. பிற்காலத்தில் மேல் தளம் அழிந்து போக கீழ்தளம் மட்டுமே தற்பொழுது உள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதாக தஞ்சைப் பெரிய கோயில் ஆய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.
இக்கோயிலின் முதல் தளமும் இரண்டாவது தளமும் உயரம் மற்றும் சுற்றளவு அளவுகளில் ஒத்து காணப்பட்டு நமக்கு வியப்பூட்டுகின்றன.மேலும் முதல் மற்றும் இரண்டாம் தளத்தின் வெளிப்புற சுவர் 13 அடி அகலத்திற்கும், உள்புற சுவர் 11 அடி அகலத்திற்கும் அமைந்து, இச்சுவர்களுக்கு இடையே 6 அடி அகலப் பாதையும் அமைந்துள்ளது.
இரண்டு சுவர்களையும் எழுப்பிச் சென்று, பின்னர் இரண்டையும் ஒன்று சேர்ந்து 30 அடி அகலத்திற்கு ஒரே அமைப்பாக மாற்றி, கோயில் கோபுரத்தின் அசாத்திய பாரத்தைச் சமமாகப் பங்கிட்டுத் தாங்கிக் கொள்ளும் வகையில் பொறியியல் தொழில் நுட்பத்தை மாமன்னர் இராஜராஜர் பயன்படுத்தியுள்ளார்.
இரண்டாவது தளத்தில் இருந்து கோயில் கோபுரத்தின் நிலைகள் ஆரம்பித்து 13 நிலைகள் கட்டப்பட்டுள்ளன.ஒவ்வொரு நிலையின் உயரமும், சுற்றளவும் குறைந்து கொண்டே வந்து, பிரமிட் போன்ற அமைப்பை உருவாக்கி இருக்கின்றது.
கோபுரத்தின் உச்சியில் 26 அடி அகலம், 26 அடி நீளம் கொண்ட தளம் உள்ளது. அந்தத் தளத்தில் 9 அடி கிரி வலமும், அதன் மீது 16 அடி உயர சிகரமும், அந்த கோபுரத்தின் மீது 12 அடி உயர செப்பு கலசமும் அமைக்கப்பட்டுள்ளது.இக்கோயிலின் மொத்த உயரம் 216 அடி ஆகும்.
கோயிலுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் கேரளாந்தகன் வாயிலையும், ராஜராஜன் பயன்படுத்த, மன்னரும் அந்தப்புர பெண்களும், மன்னரின் முக்கிய பரிவாரங்களும் வருவதற்கென்று தனியாக ஒரு வாசலை ஏற்படுத்தியுள்ளார்.
இது மட்டுமல்லாது ராஜராஜனின் படைத்தளபதி கிருட்டினன் ராமன் என்னும் மும்முடிச் சோழப் பிரம்மராயன் என்பார் கட்டிய திருச்சுற்று மாளிகை ப வடிவில் நடுவே இராஜராஜன் வாயிலை இணைக்கும் வகையில் உள்ளது.இதில் 36 பரிவார ஆலயங்கள் உள்ளன.
தஞ்சைப் பெரிய கோயிலில் கட்டப்பெற்ற காமக் கோட்டமே அம்மனுக்கு தனியாக கட்டப்பெற்ற முதல் ஆலயம் என்ற பெருமையினைப் பெறுகிறது.
மேலும் வானுயர எழுந்து நிற்கும் தஞ்சைப் பெரிய கோயில் கோபுரம் முழுமையும், மாமன்னர் இராஜராஜன் காலத்தில் தங்கத் தகடுகளால் போர்த்தப்பட்டு இருந்மை கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது. ஆனால் பிற்காலத்தில் அந்தத் தங்கத் தகடுகளும் ஏராளமான செல்வங்களும் கோயிலில் இருந்து கொள்ளையடிக்கப்ப்டடு விட்டன என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இத்துனை சிறப்பு பெற்ற இராஜராஜீச்சரம் என்ற பெரிய கோயிலை எடுப்பித்த மாமன்னர் இராஜராஜன் எத்துனை அறிவியல் நுட்பத்தை பெற்றிருந்திருக்கிறார் என்பதை நினைத்துப் பார்த்தால் நம் மனது பிரமித்து நின்றுவிடுகிறது.
வாழ்க தஞ்சைப் பெரிய கோயில் வாழ்க இராஜராஜ சோழன்
.
அருமையானக் கட்டுரை. தங்களின் வலைப் பூ மேலும் மலர, வாடா மலராய் என்றென்னும் மனம் வீச வாழ்த்துகின்றேன்.
ReplyDeleteதஞ்சை கோயிலின் கட்டுமான வரைபடங்கள் எந்த புத்தகத்தில் உள்ளன?
ReplyDeleteதயவு செய்து கூறவும்.