Tuesday 13 October 2015

வலைப்பூ பதிவர் மாநாடு

ச்சும்மா மிரட்டிட்டாங்கோ புதுகைக்காரங்க..........
             கடந்த ஞாயிற்றுக்கிழமை 11.10.2015 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புதுக்கோட்டை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் ஒவ்வொரு நிமிடமும் பர பரவென நகர்ந்தது.
             ஒரு அசராத அணியின்  தன்னலமற்ற உழைப்பு ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அழகாக செதுக்கியது.
              ஒரு அழகான கூட்டணி ஒன்று சற்றும் ஓய்வின்றி ஓடி ஓடி அந்த நாளினை நிகழ்வில் பங்கேற்ற  எவரும் எளிதில் மறக்க இயலாமல் செய்தது.
                அங்கு 8 முதல் 80 வயது வரை உள்ளவர்கள் இருந்தனர்.
                அங்கு அனைத்து வகையான பணியில் உள்ளவர்களும் இருந்தனர்.
                 பாலினம், மதம், இனம், பதவி, ஏழை-பணக்காரர் வேற்றுமை போன்ற பேதங்கள் இல்லை.
                 இன்னும் பலர் அங்குதான் நேருக்கு நேர் சந்தித்தனர். ஆனால் பல காலம் பழகிய பாசம் வெளிப்பட்டது.. உரிமையுடன் கேலியும் கிண்டலும் வெளிப்பட்டன. ஒருவரை ஒருவர் அன்பு பாராட்டுவதில் கடும் போட்டி நிலவியது.
              அங்கு கர்வம் காணாமல் போய் விட்டது.
               வாரத்தின் ஒரே விடுமுறை தினத்தில் நேரம் இங்கு கழிகின்றதே என்ற விசனம் யாருடைய முகத்திலும் இல்லை.
                கலந்து கொண்டவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்?
              புதுகை மாவட்டத்தினர் மட்டுமா ? இல்லை, இல்லை...
              சென்னை, மதுரை, கோவை , புதுவை, திருச்சி, ஈரோடு, திண்டுக்கல், நெல்லை, நாமக்கல் என்று தமிழகமெங்கும், மேலும் பெங்களூர் போன்ற இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் ஏன் அமெரிக்காவிலிருந்தும் வந்திருந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.    
              இத்துனை நண்பர்களையும் முகம் கோணாமல் வரவேற்று உபசரித்து  நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திக் காட்டியது புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்க அன்பர்கள் குழு.
              இத்தனை நிகழ்வுகளும் எதற்காக?
      ஈரோடு, சென்னை, மதுரை மாநகரங்களில் நடந்த வலைப் பதிவர் திருவிழாக்களை தொடர்ந்து புதுகை மாநகரில் நான்காம் வலைப் பதிவர் திருவிழாவிற்காகவே இத்தனை நிகழ்வுகளும் நடைபெற்றன.  
       கவிஞர் முத்துநிலவன் அவர்களின் தலைமையில் புதுகை கணினித் தமிழ்ச் சங்க அணியினர் அனைத்து தளங்களிலும் குறையேதுமின்றி அசத்தி விட்டனர்.
                தஞ்சையிலிருந்து நண்பர் கரந்தை ஜெயக்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர், திரு.ஜெம்புலிங்கம், திரு.ஹரணி, திரு.ஆர்.வி.சரவணன், திரு.ஆறுமுகம், திரு.உலகநாதன்   ஆகியோருடன் சென்று அற்புதமான அந்த விழாவில் நானும் கலந்து கொள்ளும் வாய்ப்பு நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்களால்  கிடைத்தது.
      கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர், தமிழ் இணையக் கல்விக் கழக உதவி இயக்குநர், விக்கி மீடியா இந்தியாவின் திட்ட இயக்குநர், எழுத்தாளர் முனைவர் எஸ்.,இராமகிருஷ்ணன் ஆகிய பெருமக்களால் நிகழ்ச்சி தரமாக பின்னப் பட்டது.
          உணவுக் குழுவினர்  மிகவும் பொறுமையாகவும் இன்முகத்துடனும் உபசரித்து மனதில் நீங்கா இடம் பிடித்தனர்.
       நிகழ்ச்சியை தொகுத்த திரு.முத்துநிலவன அவர்களும் திரு.தங்கம் மூர்த்தி ஆகியோர் அசராமல் பணி செய்தனர்.
       பல நாட்கள் ஓய்வின்றி உழைத்து ஒரு அருமையான வார்த்தைகளால் அனைத்து நிகழ்வுகளையும் வடிக்க இயலாத விழாவினை நடத்தி புதுகை வலைப் பூ குழுவினர் நம்மை ச்சும்மா ...மிரட்டிட்டாங்கோ....
             இத்தனை நாட்களுக்கு பிறகும் எங்க மிரட்சி இன்னும் போகலைங்க....
நன்றி... நன்றி.. நன்றி...கோடானு கோடி நன்றிகள் புதுகைக்காரங்களுக்கு.
                  பெயர் குறிப்பிடாமல் விடுபட்டு போன அத்துணை புதுகை சகோதர சகோதரிகள் [சகோதரி கீதா போன்ற] அனைவருக்கும் எங்கள் தஞ்சை வலைப்பூ பதிவர்களின் நன்றியினை பாசத்துடன்  உரித்தாக்குகிறேன்.