Tuesday, 13 October 2015

வலைப்பூ பதிவர் மாநாடு

ச்சும்மா மிரட்டிட்டாங்கோ புதுகைக்காரங்க..........
             கடந்த ஞாயிற்றுக்கிழமை 11.10.2015 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புதுக்கோட்டை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் ஒவ்வொரு நிமிடமும் பர பரவென நகர்ந்தது.
             ஒரு அசராத அணியின்  தன்னலமற்ற உழைப்பு ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அழகாக செதுக்கியது.
              ஒரு அழகான கூட்டணி ஒன்று சற்றும் ஓய்வின்றி ஓடி ஓடி அந்த நாளினை நிகழ்வில் பங்கேற்ற  எவரும் எளிதில் மறக்க இயலாமல் செய்தது.
                அங்கு 8 முதல் 80 வயது வரை உள்ளவர்கள் இருந்தனர்.
                அங்கு அனைத்து வகையான பணியில் உள்ளவர்களும் இருந்தனர்.
                 பாலினம், மதம், இனம், பதவி, ஏழை-பணக்காரர் வேற்றுமை போன்ற பேதங்கள் இல்லை.
                 இன்னும் பலர் அங்குதான் நேருக்கு நேர் சந்தித்தனர். ஆனால் பல காலம் பழகிய பாசம் வெளிப்பட்டது.. உரிமையுடன் கேலியும் கிண்டலும் வெளிப்பட்டன. ஒருவரை ஒருவர் அன்பு பாராட்டுவதில் கடும் போட்டி நிலவியது.
              அங்கு கர்வம் காணாமல் போய் விட்டது.
               வாரத்தின் ஒரே விடுமுறை தினத்தில் நேரம் இங்கு கழிகின்றதே என்ற விசனம் யாருடைய முகத்திலும் இல்லை.
                கலந்து கொண்டவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்?
              புதுகை மாவட்டத்தினர் மட்டுமா ? இல்லை, இல்லை...
              சென்னை, மதுரை, கோவை , புதுவை, திருச்சி, ஈரோடு, திண்டுக்கல், நெல்லை, நாமக்கல் என்று தமிழகமெங்கும், மேலும் பெங்களூர் போன்ற இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் ஏன் அமெரிக்காவிலிருந்தும் வந்திருந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.    
              இத்துனை நண்பர்களையும் முகம் கோணாமல் வரவேற்று உபசரித்து  நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திக் காட்டியது புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்க அன்பர்கள் குழு.
              இத்தனை நிகழ்வுகளும் எதற்காக?
      ஈரோடு, சென்னை, மதுரை மாநகரங்களில் நடந்த வலைப் பதிவர் திருவிழாக்களை தொடர்ந்து புதுகை மாநகரில் நான்காம் வலைப் பதிவர் திருவிழாவிற்காகவே இத்தனை நிகழ்வுகளும் நடைபெற்றன.  
       கவிஞர் முத்துநிலவன் அவர்களின் தலைமையில் புதுகை கணினித் தமிழ்ச் சங்க அணியினர் அனைத்து தளங்களிலும் குறையேதுமின்றி அசத்தி விட்டனர்.
                தஞ்சையிலிருந்து நண்பர் கரந்தை ஜெயக்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர், திரு.ஜெம்புலிங்கம், திரு.ஹரணி, திரு.ஆர்.வி.சரவணன், திரு.ஆறுமுகம், திரு.உலகநாதன்   ஆகியோருடன் சென்று அற்புதமான அந்த விழாவில் நானும் கலந்து கொள்ளும் வாய்ப்பு நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்களால்  கிடைத்தது.
      கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர், தமிழ் இணையக் கல்விக் கழக உதவி இயக்குநர், விக்கி மீடியா இந்தியாவின் திட்ட இயக்குநர், எழுத்தாளர் முனைவர் எஸ்.,இராமகிருஷ்ணன் ஆகிய பெருமக்களால் நிகழ்ச்சி தரமாக பின்னப் பட்டது.
          உணவுக் குழுவினர்  மிகவும் பொறுமையாகவும் இன்முகத்துடனும் உபசரித்து மனதில் நீங்கா இடம் பிடித்தனர்.
       நிகழ்ச்சியை தொகுத்த திரு.முத்துநிலவன அவர்களும் திரு.தங்கம் மூர்த்தி ஆகியோர் அசராமல் பணி செய்தனர்.
       பல நாட்கள் ஓய்வின்றி உழைத்து ஒரு அருமையான வார்த்தைகளால் அனைத்து நிகழ்வுகளையும் வடிக்க இயலாத விழாவினை நடத்தி புதுகை வலைப் பூ குழுவினர் நம்மை ச்சும்மா ...மிரட்டிட்டாங்கோ....
             இத்தனை நாட்களுக்கு பிறகும் எங்க மிரட்சி இன்னும் போகலைங்க....
நன்றி... நன்றி.. நன்றி...கோடானு கோடி நன்றிகள் புதுகைக்காரங்களுக்கு.
                  பெயர் குறிப்பிடாமல் விடுபட்டு போன அத்துணை புதுகை சகோதர சகோதரிகள் [சகோதரி கீதா போன்ற] அனைவருக்கும் எங்கள் தஞ்சை வலைப்பூ பதிவர்களின் நன்றியினை பாசத்துடன்  உரித்தாக்குகிறேன்.

Monday, 9 January 2012

தேசிய கீதம் 100


      நோபல் பரிசினை வென்ற வங்களத்தைச் சேர்ந்த கவிஞர் திரு இரவீந்திர நாத் தாகூர் அவர்களின் ஜன கன மண எனத் துவங்கும் கவிதையே நமது இந்திய நாட்டின் தேசிய கீதமாக இசைக்கப் பட்டுவருவது நாம் அனைவரும் அறிந்ததே.

     நம்மில் மிகச் சிலர் மட்டுமே அறிந்த தேசியகீதம் பற்றிய மேலும் சில சுவையானத் தகவல்களை பண்பலை வானொலி மூலம் கேட்டறிந்ததை இங்கு தருகின்றேன்.

01.      கவிஞர் தாகூரின் பிரம்மஸ் துதி என்ற கவிதை மொத்தம் ஐந்து பத்திகளைக் கொண்டது. அதன் முதல் பத்தியை மட்டுமே நமது நாட்டின் தேசிய கீதமாக எடுத்து பயன்படுத்தப் பட்டு வருகின்றது.
02.      கொல்கத்தா நகரில் இருந்து வெளிவந்த தத்துவ போதினி பத்திரிக்கையில் பாரத் பிதா என்ற தலைப்பில் இந்த கவிதை முதன் முதலாக வெளிவந்தது.
03.      திருமதி மார்கிரெட் சசின் என்பவரால் இந்த ஐன கன மன பாடலுக்கு இசைவடிகம் முதன் முதலாகக் கொடுக்கப் பட்டது.
04.      27.12.1911 ல் ஒரு மாநாடு ஒன்றில் திருமதி சரளா தேவி சௌத்ராணி என்பவரால் முதன் முதலாக ஐன கன மண பாடல் பாடப்பட்டது, எனவே இப்பாடல் பாடப்பெற்று நூறாண்டுகள் முடிவுற்றுள்ளன.
05.      நமது பாராளுமன்றத்தில் சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடல் நமது நாட்டின் விடுதலைக்குப் பெரும் உதவி செய்தது என்று சிறப்பு செய்யப்பட்டது. அதே பாராளுமன்றத்தில் சட்டர்ஜியின் வந்தே மாதரம் பாடலை தேசிய கீதமாகப் பாடுவதா? அல்லது, தாகூரின் ஐன கன மண பாடலை தேசிய கீதமாகப் பாடுவதா?  என்ற வினா எழுந்த பொழுது நாடு முழுவதம் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கருத்து கேட்கப்பட்ட பொழுது, பெரும்பான்மையான மாநிலங்கள் ஐனகன மண பாடலுக்கு ஆதரவு தெரிவித்திருந்ததால் 24.01.1950 ஆம் நாள் அப்பாடல் தேசிய கீதமாக அறிவிக்கப் பட்டது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஜன கன மண பாடலின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம்
06.      இந்திய தேசிய கீதமான ஐன கன மண பாடலானது சரியாக 52 வினாடிகளில் பாடி முடிக்கப் பட வேண்டும் என்று விதியமைக்கப்பட்டுள்ளது.
07.      மிகவும் நெருக்கடியான காலத்தில் மட்டுமே பாடலின் முதல் இரு வரிகளையும், கடைசி இரு வரிகளையும் 20 வினாடிகளில் பாடப் பட வேண்டும் என்ற விதியும் உள்ளது.
08.      தாகூர் அவர்களின் மற்றொரு கவிதை நமது அண்டை நாடான வங்காள தேசத்தின் தேசிய கீதமாகப் பாடப்பட்டு வருகிறது என்பதை அறியும் பொழுது ஒரே கவிஞரின் இரு வேறு கவிதைகள் இரண்டு நாடுகளில் தேசிய கீதமாக பாடப்படுவது இந்த உலகில் வேறெங்கும் காணப்படாத சிறப்பான நிலை என்று கருதுகிறேன்.

நன்றி கோடை பண்பலை

Thursday, 3 November 2011

அருள்மொழி வர்மனின் அறிவியல் தொழில் நுட்பம்

        தமிழ் இனத்தின் தொழில் நுட்பம் சார்ந்த திறமைகளுக்கு முக்கிய சான்றாக ஆயிரம் ஆண்டுகளாக பிரமாணட்மாக காட்சி தந்து வரும் இராஜராஜீச்சரம் என்ற தஞ்சை பெரிய கோயிலை எடுப்பித்து உலகினையே வியக்கச் செய்தவர் மாமன்னர் இராஜராஜ சோழன் என்று அழைக்கப்படும் அருள்மொழிவர்மன் ஆவார்.பத்தாம் நூற்றாண்டில் கி.பி.985 ல் முடிசூட்டிக் கொண்ட மாமன்னர் இராஜராஜன் திட்டமிடுதல். திட்டமிட்டபடி செயல்படுதல். நீண்ட கால நோக்கு புறவயத்தன்மை. புதிய தொழில் நுட்பங்களை செயல்படுத்துதல் போன்ற அறிவியல் மதி நுட்பங்களையும் தொழில் நுட்பங்களையும் எந்த அளவிற்கு பெற்றிருந்தார் என்பதை இக்கட்டுரையின் வாயிலாக சிறிதளவு காணலாம்.
          பத்து நூற்றாண்டுகளாக இயற்கை பேரழிவுகளையும், எதிரி நாட்டுப் படையெடுப்புகளையும் தாண்டி, இன்றும் மவுனமான முனிவரைப் போன்று தஞ்சைப் பெரிய கோயில் இருந்து வருவதற்கும், அத்தனை பிரமாணட்மான கோயில் கி.பி.1004 முதல் கி.பி.1010 வரையிலான ஆறே ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டதற்கும் அடிப்படையிலான காரணங்களாக இருப்பவை, மாமன்னர் இராஜராஜனின் அறிவியல் மதி நுட்பமும், கோயில் கட்டும் பணியில் ஈடுபட்ட அனைவரையும் அரவணைத்து சென்ற அவரின் தலைமைப் பண்புமே ஆகும்.
     பொதுவாக அறிவியல் அறிஞர்களின் பண்புகளாக தற்காலத்தில் கருதப்படுபவை, கருதுகோள் அமைத்தல், அக்கருதுகோளுக்கு பல வழிமுறைகளை உருவாக்குதல், அவற்றை சோதிக்கத் திட்டமிடுதல், திட்டமிட்டவாறே அயராது பாடுபட்டு  உண்மையைக் கண்டறிதல், கண்டறிந்த உண்மைகளை இந்த உலகிற்கு அர்ப்பணித்தல் ஆகியவையாகும். இத்துனை பண்புகளையும் சிறிதளவுகூட குறைவில்லாமல் மாமன்னர் இராஜராஜன் பெற்றிருந்த காரணத்தினால் உலகே வியக்கும் இப்பெரிய கோயிலை ஆறே ஆண்டுகளில் கட்டி முடிக்க முடிந்திருக்கிறது.
     காஞ்சிபுரத்தில் உள்ள கைலாயநாதர் கோயிலைக் கண்டவுடன் இதனைவிட வானளாவிய கோயிலைத் தான் வணங்கும் ஈசனுக்குக் கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டார் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
      ஒரு கட்டிடம் எழுப்புவதற்கு முன் அந்த இடத்தின் மண் அதற்கு ஏற்றதாக உள்ளதா? என்று மண் பரிசோதனை செய்வது தற்காலத்தில் மட்டுமே நடைபெறுவதாக நினைத்துக் கொண்டிருந்த நமக்கு, ஏறத்தாழ 50,000 டன் எடை கொண்ட கோயில் விமானத்தின் எடையைத் தாங்கவல்ல இடத்தை மாமன்னர் இராஜராஜனும் தலைமைத் தச்சரும் தேர்ந்தெடுத்த பிறகே பெரியகோயிலை எழுப்பினார்கள் என்பதை அறியும்பொழுது நமக்கு வியப்பு மேலிடுகிறது. அதாவது விவசாய களிமண் நிலத்தைப் பெற்றிருக்கும் தஞ்சை நகரின் மேற்குப் பகுதியில் 162 டன் எடையை ஒரு சதுர மீட்டரில் தாங்கும் அளவிற்கு உள்ள இடத்தை தேர்ந்தெடுத்து அதிலும். 47.4 டன் எடையை ஒரு சதுர மீட்டரில் தாங்கும் வண்ணம் பெரிய கோயில் கட்டுவிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து அவருடைய அறிவியல் மதிநுட்பத்தை நாம் போற்றியாக வேண்டும்
    தஞ்சைக்குத் தெற்கு, தென்மேற்கு திசைகள் தவிர மற்ற திசைகள் அனைத்தும் ஆறுகளாலும், வாய்க்கால்களாலும் சூழப்பட்டு இருக்கின்றன. எனவே மற்ற பாதைகள் வழியாக கற்களை எடுத்து வருவது என்பது கடினமான பணியாக இருக்கும் என்பதாலும், தஞ்சையைவிட சற்று உயரமான தென்மேற்கு திசையே போக்குவரத்துக்கு ஏற்ற பகுதியாக இருக்கும் என்பதாலும், தஞ்சைக்கு அருகே கற்பாறைகள் கிடைக்கம் இடமும் அத்திசையே என்பதாலும், புதுக்கோட்டை மாவட்டம் குன்னாண்டார் கோயில் பகுதியில் இருந்த மலைகளில் இருந்து எடுத்து வரப்பெற்ற கற்கள்தான் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்ட பயன்படுத்தப்பெற்று இருக்கின்றன.

இந்த குன்னாண்டார் கோயில் தஞ்சையிலிருந்து ஏறத்தாழ 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் டன் எடை கொண்ட கற்களை இவ்வளவு தொலைவில் இருந்து சேதாரம் இல்லாமல் கொண்டு வந்ததே மாபெரும் இமாலய சாதனையாகக் கருதப்படுகிறது.


     வீரசோழன் குஞ்சரமல்லான பெருந்தச்சன் என்பவர் தலைமை கட்டிடக் கலைஞராகவும், கோயிலின் இரண்டாம் நிலையைக் கட்டி முடிப்பதில் மதுராந்தகனான நித்த வினோத பெருந்தச்சன், இலத்தி சடையான கண்டராதித்த பெருந்தச்சன் ஆகியோரும் பெரும்பங்கு வகித்து இருக்கின்றார்கள் என்பதை தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.

     மாமன்னர் இராஜராஜன் தான் கட்ட இருப்பது முழுவதும் கற்களால் ஆன கோயில் என்பதை அறிந்து, அக்கோயிலுக்கு எவ்வளவு கற்கள் தேவைப்படும் என்பதையும், அவற்றை பத்திரமாகக் கொண்டு வந்து சேர்க்க வேண்டிய வழி முறைகளையும், அதற்குத் தேவையான ஆட்கள், வாகனங்கள், யானைப் படை, கோயிலின் அதிகப்படியான எடையை தாங்கி நிற்கும் சுவர்கள் எந்த அளவு வலிமையாக இருக்க வேண்டும் என்பது போன்ற அனைத்து விபரங்களையும் விரல் நுனியில் வைத்துக்கொண்டுதான் கோயில் கட்டும் பணியினைத் தொடங்கி இருக்கின்றார். இதிலிருந்தே அவர் ஒரு அற்புதமான செயல் திட்டம் ஒன்றினை வகுத்து அதன்படி செயல்பட்டுள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

     மேலும் கோயிலின் கட்டிடப் பணி முடிந்தவுடன் அதன் எழில் மிகு கோபுரம் எங்கிருந்து பார்த்தாலும் அதன் அழகு சிறிதளவும் மறைக்கப்படக் கூடாது என்பதற்காக கோயில் வளாகதத்திற்கு 240 அடி நீளம் 120 அடி அகலம் கொண்ட பிரமாண்ட நீள் சதுர நிலைப் பகுதியைத் தேர்ந்தெடுத்து, அதன் பின்பாதியின் நடுப்பகுதியில் எடுப்பான கோபுரத்தை எழுப்பி உள்ளார் என்பதை அறியும்பொழுது, மாமன்னர் இராஜராஜனின் பொறியியல் திறனை தெரிந்து கொள்ள முடிகிறது.

     மேலும் கோயில் வளாகத்தில் வேறு கட்டிடங்களைக் கட்டினால், அக்கட்டிடங்கள் கோயிலின் அழகைக் குலைத்து விடும் என்பதால், சண்டீஸ்வரம் ஆலயத்தினையும், முக்கிய வாசல்களையும் மட்டுமே இராஜராஜன் கட்டியுள்ளார்.இப்பொழுது கோயில் வளாகத்தில் இருக்கும் நந்தி மண்டபம் உட்பட மற்ற கோயில்களை அனைத்தும் நாயக்க மன்னர்கள் போன்றோரின் பிற்காலச் சேர்க்கையே ஆகும்.

     கோயில் கோபுரத்தைத் தாங்கி நிற்கும் இரட்டைத் தளம் 80 அடி உயரம் கொண்டது. அதன் முதல் தளம் 60 அடி உயரமும், இரண்டாவது தளம் 20 அடி உயரமும் கொண்டது. அதற்கு முன்னால் இருக்கும் முகமண்டபமும் இராஜராஜன் காலத்தில் இரட்டை தளங்களாக இருந்துள்ளது. பிற்காலத்தில் மேல் தளம் அழிந்து போக கீழ்தளம் மட்டுமே தற்பொழுது உள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதாக தஞ்சைப் பெரிய கோயில் ஆய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.

     இக்கோயிலின் முதல் தளமும் இரண்டாவது தளமும் உயரம் மற்றும் சுற்றளவு அளவுகளில் ஒத்து காணப்பட்டு நமக்கு வியப்பூட்டுகின்றன.மேலும் முதல் மற்றும் இரண்டாம் தளத்தின் வெளிப்புற சுவர் 13 அடி அகலத்திற்கும், உள்புற சுவர் 11 அடி அகலத்திற்கும் அமைந்து, இச்சுவர்களுக்கு இடையே 6 அடி அகலப் பாதையும் அமைந்துள்ளது.

     இரண்டு சுவர்களையும் எழுப்பிச் சென்று, பின்னர் இரண்டையும் ஒன்று சேர்ந்து 30 அடி அகலத்திற்கு ஒரே அமைப்பாக மாற்றி, கோயில் கோபுரத்தின் அசாத்திய பாரத்தைச் சமமாகப் பங்கிட்டுத் தாங்கிக் கொள்ளும் வகையில் பொறியியல் தொழில் நுட்பத்தை மாமன்னர் இராஜராஜர் பயன்படுத்தியுள்ளார்.

     இரண்டாவது தளத்தில் இருந்து கோயில் கோபுரத்தின் நிலைகள் ஆரம்பித்து 13 நிலைகள் கட்டப்பட்டுள்ளன.ஒவ்வொரு நிலையின் உயரமும், சுற்றளவும் குறைந்து கொண்டே வந்து, பிரமிட் போன்ற அமைப்பை உருவாக்கி இருக்கின்றது.

     கோபுரத்தின் உச்சியில் 26 அடி அகலம், 26 அடி நீளம் கொண்ட தளம் உள்ளது. அந்தத் தளத்தில் 9 அடி கிரி வலமும், அதன் மீது 16 அடி உயர சிகரமும், அந்த கோபுரத்தின் மீது 12 அடி உயர செப்பு கலசமும் அமைக்கப்பட்டுள்ளது.இக்கோயிலின் மொத்த உயரம் 216 அடி ஆகும்.

     கோயிலுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் கேரளாந்தகன் வாயிலையும், ராஜராஜன் பயன்படுத்த, மன்னரும் அந்தப்புர பெண்களும், மன்னரின் முக்கிய பரிவாரங்களும் வருவதற்கென்று தனியாக ஒரு வாசலை ஏற்படுத்தியுள்ளார்.

     இது மட்டுமல்லாது ராஜராஜனின் படைத்தளபதி கிருட்டினன் ராமன் என்னும் மும்முடிச் சோழப் பிரம்மராயன் என்பார் கட்டிய திருச்சுற்று மாளிகை வடிவில் நடுவே இராஜராஜன் வாயிலை இணைக்கும் வகையில் உள்ளது.இதில் 36 பரிவார ஆலயங்கள் உள்ளன.

     தஞ்சைப் பெரிய கோயிலில் கட்டப்பெற்ற காமக் கோட்டமே அம்மனுக்கு தனியாக கட்டப்பெற்ற முதல் ஆலயம் என்ற பெருமையினைப் பெறுகிறது.

     மேலும் வானுயர எழுந்து நிற்கும் தஞ்சைப் பெரிய கோயில் கோபுரம் முழுமையும், மாமன்னர் இராஜராஜன் காலத்தில் தங்கத் தகடுகளால் போர்த்தப்பட்டு இருந்மை கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது. ஆனால் பிற்காலத்தில் அந்தத் தங்கத் தகடுகளும் ஏராளமான செல்வங்களும் கோயிலில் இருந்து கொள்ளையடிக்கப்ப்டடு விட்டன என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

     இத்துனை சிறப்பு பெற்ற இராஜராஜீச்சரம் என்ற பெரிய கோயிலை எடுப்பித்த மாமன்னர் இராஜராஜன் எத்துனை அறிவியல் நுட்பத்தை பெற்றிருந்திருக்கிறார் என்பதை நினைத்துப் பார்த்தால் நம் மனது பிரமித்து நின்றுவிடுகிறது.

வாழ்க தஞ்சைப் பெரிய கோயில்                                                  வாழ்க இராஜராஜ சோழன்
.

Wednesday, 14 September 2011

                                                                   EDUCATION
                            EDUCATION IS A VERY SENSITIVE WEAPON TO FIGHT AGAINST THE  INNOCENCE,POVERTY FOR THE  POOR PEOPLE AND A VERY BASIC WEAPON FOR A NATION TO ACHIEVE ITS A HONORARY POSITION IN THIS WORLD.EDUCATION CAN GIVE US ANYTHING UNDER THIS SKY, AND YOU HAVE KNOWN  THAT IT WILL INCREASES WHENEVER WE GIVES IT TO OTHER PEOPLE. THE ONLY WEALTH OF THIS WORLD WHICH INCREASES WHENEVER IT DONATES IS EDUCATION.
         From the childhood days I  dreamed about TEACHING profession and finally I got it. Now I am working as a Teacher with mental and professional satisfaction. This job was introduced me new friends, new students, new people,new books, new environments etc., and this will continued in future life also. These things make me younger in mind and be very confident in my life. And  I exactly know my  responsibilities of this job to promote the qualities (reading, writing, presenting) of my students. So I am regularly preparing the lessons and trying to control my students to touch with lessons in update. My ambition is not only produce Doctors,Engineers,Teachers,Lawyers,Technicians in many fields but also to produce  good persons for this world.

Monday, 5 September 2011

chemistry

chemistry is one of the branch of science and it seems to be hard but it is easy to understand if we have interest on that subject.